21 May 2014

கண்டேன் கங்கையை!

ஐந்தாம் தேதி இரவு ஒரு மணிவரை கடும் வேலை. அடுத்த நாள் காலை 7 மணி அளவில் கயா எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும். மாலையே பயணத்திற்கு வேண்டிய சில பொருட்களைக் கொள்முதல் செய்து வைத்திருந்தேன். இரவு 7 மணி முதல் 1 மணி வரை முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தேன். தூங்கச் செல்லும்போது மணி 2. பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் என் மனைவி தயார் செய்து வைத்திருந்தாள். காலை 4.30 மணிக்கு எனது மனைவியால் எழுப்பிவிடப்பட்டேன். அவசர அவசரமாகக் குளித்துக் கொண்டிருந்த போது, நண்பர் திரு.ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களிடம் இருந்து தொலைபேசி.

"சார், ஏழு நாள் ஊரில் இருக்க மாட்டோம். கொத்தாரி கம்பனிக்கு ஒரு அப்ளிகேஷன் பாரம் தட்டச்சுச் செய்து அனுப்ப வேண்டும். அதை அனுப்பாமல் என்னால் காசிக்கு வர முடியாது" என்றார். "சரி பொறுங்கள்" என்று சொல்லி, குளித்து முடித்துவிட்டு, அந்த விண்ணப்பத்தைத் தட்டச்சுச் செய்து மின்னஞ்சல் அனுப்பினேன்.

திரு.ஜெகதீஷ் அவர்கள்
6.5.2014 காலை 5.30 மணிக்கு, நான், திரு.விக்ரம் சீனிவாசன், திரு.ஆர்.கே. கமலக்கண்ணன் ஆகியோர் விக்ரம் அச்சகத்தில் கூடி, தேரடியில் இருந்து எழும்பூர் செல்லும் பேருந்தில் காலை 6.00 மணிக்கு ஏறினோம். பேருந்தில் ஏறியதும் திரு.ஜெகதீஷ் அவர்களிடம் இருந்து தொலைபேசி, "என்னங்க, எல்லோரும் சரியான நேரத்துக்கு வந்துருவீங்களா?" "வந்திடுவோம். எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டோம்" என்று சொன்ன எனக்குத் திரு.ஜெயவேலன் அவர்கள் ஞாபகம் வந்தது.

பேருந்து சுங்கச்சாவடியைக் கடந்து கொண்டிருந்த போது, திரு.ஜெயவேலன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தேன். "என்னங்க, கிளம்பிட்டீங்களா?" என்று கேட்டேன். "இல்லை. வீட்டுலதான் இருக்கேன். இனிதான் கிளம்பணும்" என்றார். "நேரம் ஆகுதுங்க சீக்கிரம் கிளம்புங்க" என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தேன்.

ஏழு மணியளவில் எழும்பூரை அடைந்தோம். கயா எக்ஸ்பிரஸ் ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்களும் அவரது குடும்பத்தாரும் எங்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு, நாங்கள் ஏற வேண்டிய கோச்சுக்கு சென்று ஏறினோம்.

திரு.ஜெயவேலன்
மணி 7.20. திரு.ஜெயவேலன் இன்னும் வரவில்லை. அவரை மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். "என்னங்க, இன்னும் உங்களக் காணும்?". "நான் ஸ்டேஷன்குள்ள நுழஞ்சுட்டேன். என்ன பிளாட்பாரம்?" என்று கேட்டார். "நான் ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரம்" என்றேன். "கோச் நம்பர் என்ன?" என்று கேட்டார். "நான் S3" என்று சொன்னேன். பிறகு அவர் இணைப்பைத் துண்டித்தார்.

ஐந்து நிமிடம் கழிந்தது. இப்போது அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "என்னங்க 9ம் நம்பர் பிளாட்பாரம் S3லதான் இருக்கேன். உங்கள யாரையும் காணோமே. என்ன சீட் நம்பர்?" என்று கேட்டார். நான் "39" என்று சொன்னேன். "இல்லையே" காணோமே" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏங்க நீங்க நல்ல உயரமாச்சே, நீங்க எங்கிருந்தாலும் எனக்குத் தெரியுமே. இருங்க பிரதீஷிடம் கொடுக்கிறேன்" என்று சொல்லி, நண்பர் பிரதீஷிடம் கொடுத்தேன். அவர், "அண்ணா, எஸ்கலேட்டர் பக்கத்திலேயே கோச் இருக்கும்ணா" என்றார். அதற்கு அவர் "சென்டிரலில் ஏதுடா எஸ்கலேட்டர்" என்று கேட்டிருக்கிறார்.

அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது. அவர் எழும்பூருக்கு வராமல் சென்டிரலுக்குச் சென்றுவிட்டார் என்று. உடனே நிலைமையைப் புரிந்து கொண்ட திரு.ஜெயவேலன் அவர்கள். ஒரு ஆட்டோவைப் பிடித்து விரைவாக எழும்பூர் வந்து மேம்பாலத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, ரயில் புறப்பட ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு நேரமும் தொலைபேசியைத் துண்டிக்காமல் பிரதீஷுடன் தொடர்பிலேயே இருந்தார் திருஜெயவேலன். அவர் கீழே இறங்கி வருவதற்குள் ரயில் நடைமேடையைத் தாண்டிவிட்டது.

அனைவருக்கும் பெரும் வருத்தமாக இருந்தது. "சரி, டிரெய்ன் அடுத்து எந்த ஸ்டேஷன்ல நிக்கும்?" என்று கேட்டார் திரு.ஜெகதீஷ். யாரோ ஒருவர் "ஓங்கோலில்" நிற்கும் என்றார். உடனே திரு.ஜெயவேல் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, "அடுத்து ஓங்கோலில் நிற்குமாம். அங்க சீக்கிரமா வந்திடுங்க" என்றார்.

அரை மணி நேரம் கழித்து ஜெயவேலன் அவர்கள் தொடர்பு கொண்டு, "காரில் வேகமா வந்தாலும் ஓங்கோல்-ல டிரெயினப் பிடிக்க முடியாதுனு டிரைவருங்க சொல்றாங்க. கவலப்படாதீங்க. நான் உங்களுக்கு முன்னையே காசிக்குப் போயிடுவேன்" என்று சொன்னார்.

நாங்கள் 16 பேர் கொண்ட குழு, அதில் ஒருவர் ரெயிலைப் பிடிக்கமுடியவில்லை என்றதும் அனைவருக்கும் உற்சாகம் குறைந்தது. அதிகாலையிலேயே எழுந்து அரக்கபறக்க ஓடி வந்து ரெயிலைப் பிடித்து, கடைசி நேர பரபரப்புக்கு உள்ளானதால் அனைவரும் சிறிது களைத்துப் போனதாகத் தெரிந்தது.

ஒரு மணி நேரம் சென்றதும், "அவர் எப்படியும் வந்துவிடுவார்" என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டு மீண்டும் உற்சாகத்தை அடைந்தோம். அனைவருக்கும் RAC டிக்கெட்தான் ஆகையால், Side Seatகளில்அனைவரும் அமர்ந்திருந்தோம். 8 சீட்டுங்கள் கொண்ட எங்கள் பகுதியில் ஒரு உத்திரப் பிரதேசக் குடும்பம் அமர்ந்திருந்தது. அவர்கள் எங்களுக்குச் சிறிது ஒத்துழைப்புக் கொடுத்ததால், நான்கு பேர் ஒரு பகுதியில் அமரக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், ஆறு பேர் சேர்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்தோம்.

இரண்டு நாள் ரயில் பயணமும் சீட்டு விளையாட்டு, அரட்டை, உறக்கம் என்றே கழிந்தது. வழியில் பல ரம்மியமான இடங்களின் தரிசனமும் கிடைத்தது. வழியெங்கும் மனிதர்களின் முகத்தோற்றமும் மொழியும் மாறுகிறதேயொழிய இந்தப் பரந்த பாரதப் பெருநிலம் முழுக்க ஒரே தன்மை இருப்பதை உணர முடிந்தது.

ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல் ஆகிய பகுதிகளைக் கடந்தோம். மாலை 7 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் திரு.ஜெயவேலன் அவர்கள் தொடர்பு கொண்டு, தான் காசியை அடைந்துவிட்டதாகச் சொன்னார். ரெயிலை விட்ட உடனேயே நண்பர்களைத் தொடர்பு கொண்டு விமானத்தில் டிக்கெட் போட சொல்லி, சென்னை-டில்லி-அலாகாபாத் சென்று அங்கிருந்து வாரணாசியை அடைந்துவிட்டதாகச் சொன்னார். நாங்கள் அனைவரும் நிம்மதி கொண்டோம்.

இரவு உணவு உண்டு உறங்கினோம். நள்ளிரவில் ரயில் நாக்பூரை அடைந்தது. இதுவரை ஹைரதாபாதைக் கடந்திராத எனக்கு நாக்பூர் ஸ்டேஷனைக் கண்டதும் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. நாம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே உவகையைத் தந்தது. Side Seatல் நானும் திரு.ஆர்.கே.கமலக்கண்ணன் அவர்களும் படுத்துக் கொண்டோம். நான் படுத்திருந்ததால் அவர் அமர்ந்து உறங்கினார். சிறிது நேரம் கழித்து அவரைப் படுக்க வைத்து விட்டு, நான் அமர்ந்த படியே உறங்கி வந்தேன்.

காலையில் "சாய், சாய்" என்ற குரலைக் கேட்டு விழிப்புத் தட்டியது. இரயில் இட்டார்சி நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அனைவரும் எழுந்து டீ குடித்து விட்டும் மீண்டும் அரட்டையில் இறங்கினோம். நாங்கள் படித்த புத்தகங்களைக் குறித்து விவாதித்தோம். மஹாபாரதம் குறித்து விவாதித்தோம். இன்றைய அரசியல், சமூகம் எனப் பல தலைப்புகளில் விவாதித்தோம். நால்வர் கூடி விவாதிப்பது என்பது அந்த நால்வருக்கும் எவ்வளவு புதிய தகவல்களைத் தருகின்றன? ஆனால் விவாதங்களில் ஈடுபடுவதற்குத் தான் நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

முதல் நாளை போலவே அன்றும் சீட்டு விளையாடினோம். நாங்கள் சீட்டு விளையாடுவதைக் கண்டு அருகில் இருந்த ஒரு உத்திரப்பிரதேச இளைஞன் எங்களுடன் சீட்டு விளையாட்டில் கலந்து கொண்டான். அவனைக் கண்டு இன்னொருவன் எங்கள் அருகிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். விளையாடிக் கொண்டே பேச்சுக் கொடுத்ததில் அவன், "நான் சென்னையில் தச்சு வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் செல்வேன். எங்கள் ஊரில் அவ்வளவு வேலை இருக்காது. ஊதியமும் குறைவு. சென்னையில் வேலை இல்லை என்ற நிலை இல்லை. ஊதியமும் திருப்திகரமாக இருக்கிறது" என்றான்.

அந்த இளைஞன் நண்பர்களுடன் வந்திருந்தான். திடீரென ரெயில் பெட்டியில் ஸ்குவாடு ஏறி டிக்கெட்டுகளைப் பரிசோதித்தார்கள். அப்போது அந்த இளைஞனுடன் வந்தவர்களில் இருவர் Confirm ஆகாத டிக்கெட்டுகளுடன் இருந்தது தெரிந்தது. ஆகையால் அந்த இளைஞன் Fine கட்டும்படி நேர்ந்தது. அது முதல் அவன் எங்களிடம் நெருங்கிப் பேசக் கூச்சப்பட்டான்.

சீட்டு விளையாட்டு, அரட்டை, உணவு, உறக்கம் என்றே அன்றும் கழிந்தது. இரவு ஏழு மணியளவில் முகல்சராய் இரயில் நிலையத்தை அடைந்தோம். வாரணாசிக்கு அருகாமையில் இருக்கும் இரயில் நிலையம் அது. அங்கே இறங்கினோம். வாரணாசிக்கு எப்படிச் செல்வது என ரயில் நிலையத்தில் விசாரித்தோம். வாரணாசிக்குச் செல்லும் ரயில் சிறிது நேரத்தில் வந்துவிடும். அதில் செல்லலாம் என்று அவர்கள் அறிவுறுத்தினர். திரு.ஜெகதீஷ் அவர்கள் ரயில் டிக்கெட் எடுத்துவந்தார். ரயில் வருவதற்கு வெகு தாமதமானது. சரி வெளியே சென்று ஆட்டோ பேசி பார்க்கலாம் என்று திரு.விக்ரம் சீனிவாசன் சென்றார். ஒரு ஆட்டோ டிரைவரிடம் பேசி மூன்று ஆட்டோக்கள் புக் செய்து அதில் சென்றோம்.

முகல்சராயில் இருந்து ஆட்டோவில் செல்லும் போது நான் கவனித்தது மோடிக்கு இருந்த வரவேற்பையும் பாஜகவின் செல்வாக்கையும் தான். எங்குத் திரும்பினாலும் மோடி மற்றும் பாஜக. வழியில் பல திருமணக் கொண்டாட்டங்களையும் கண்டோம். தமிழ்நாட்டில் உள்ளது போல இல்லாமல், தெருக்களில் நடைபெறும் திருமணக் கொண்டாட்ட ஆட்டங்களில் மகளிரும் பங்கு பெறுகின்றனர்.

வழியெங்கும் இருள். எந்தத் தெருவிளக்கும் எரியவில்லை. அந்தச் சாலை ஒரு நெடுஞ்சாலையைப் போலத் தான் இருந்தது. ஆனால் அச்சாலைகள் பள்ளமும் மேடுமாக கரடுமுரடாக இருந்தது. அதைக் காரிருள் மூடியிருந்தது.

வாரணாசியை நெருங்குமுன் ஆட்டோ ஒரு பாலத்தைக் கடந்தது. "இதுதான் கங்கை" என்றார் ஆட்டோக்காரர். அப்போது ஏற்பட்ட பரவசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாலத்தைக் கடந்த பிறகும் கண்கள் காணும் வரை கங்கையை எட்டிப் பார்த்தபடியே வந்தேன். கங்கையைக் கடந்த வரும்போது ஆர்.கே.அவர்கள் "பாருங்க சார். பட்டுத்துணியால் மூடி பிணத்தை எடுத்து வருகிறார்கள்" என்றார். ஆனால் நான் பார்ப்பதற்குள் அக்கூட்டம் மறைந்து போனது. அதே போல மற்றுமொரு இடத்தில் திரு.ஜெகதீஷ் அவர்கள் "பிணத்தை எடுத்துச் செல்கிறார்கள்" என்றார் அதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது "காசியில் இறக்க வேண்டும்" என்ற மக்களின் நம்பிக்கையைக் குறித்துப் பேசிய படியும் கடைத்தெருக்களை நோட்டம்விட்டபடியும் ஆட்டோவில் பயணித்தோம்.

பயணத்தை ஏற்பாடு செய்திருந்த திருமதி.சுதா அவர்கள் நாங்கள் தங்குவதற்காகச் சங்கரமடத்தில் ரூம் புக் செய்திருந்தார்கள். ஆகவே சங்கரமடத்திற்கு வழிகேட்டபடியே பயணித்தோம். திரும்பினால் சங்கர மடம் அங்கே திரு.ஜெயவேலன் அவர்கள் எங்களை வரவேற்றபடி நின்று கொண்டிருந்தார். "என்னங்க இது. தாடியும், மீசையுமா?" என்றார். நான் வேண்டுதல் என்றேன். திருமதி.சுதா அவர்கள் சங்கர மடத்தில் பேசி அறைகளை உறுதி செய்வதற்குள் நான், திரு.ஜெயவேலன், திரு.ஜெகதீஷ், திரு.விக்ரம்சீனிவாசன், திரு.ஆர்.கே. திரு.பிரதீஷ் ஆகியோர் காபி குடிப்பதற்காகச் சென்றோம். மண் குவளையில் காப்பிக் கொடுத்தார்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறு மண் குடுவையில் காபி என்றால் ரூ.10, பெரிய குடுவையில் என்றால் ரூ.30/ ஆம்.

அதற்குள் அறைகள் உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வரவே உடனே அறைக்குச் சென்று எங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சோர்வு களைய ஒரு குளியலைப் போட்டு, பேண்டில் இருந்து கைலிக்கு மாறினேன். இரவு நேரத்திலேயே கங்கையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் எங்கள் குழுவில் இருந்த ஆண்கள் அனைவரும் கிளம்பினோம். மடத்தை விட்டு வெளியே வந்த போது, ஒருவர் இங்கே கைலி அணியக்கூடாது என்றார். ஆகவே உடனே அறைக்குச் சென்று வேட்டி கட்டி கொண்டு வந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே அனுமான் காட்டும், ஹரிச்சந்திரன் காட்டும் (வாயில்கள்) இருந்தன. அனுமான் காட் வழியாகப் படித்துறையில் இறங்கினோம். கங்கையை அருகிலேயே கண்டோம். "கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்" என்று எனக்குக் கூவத்தோன்றியது. கங்கையில் நீராட வேண்டும் என்ற ஆசை. ஆனால் இரவில் நீர்நிலைகளில் நீராடக்கூடாது என்று மகாபாரதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ஆகையால் அவ்வாசையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அனுமான் காட்டில் இருந்து ஹரிச்சந்திரன் காட்டுக்குச் சென்றோம். பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. "நான் கடவுள்" திரைப்படத்தில் கண்டது போல அக்காட்சி இருந்தது. அவ்வளவு பிணங்கள் அங்கு எரிகின்றன ஆனால் துர்நாற்றம் என்பது கிஞ்சிற்றும்  இல்லை.

ஹரிச்சந்திரன் காட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்த போது திரு.ஜெயவேல் அவர்கள் சொன்னார், "நேற்றே வந்துவிட்டேனா, என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்று முழுவதும். இங்கே இருந்து நடந்தபடியே எல்லாப் படித்துறைக்கும் போய்ப் பாத்துட்டு வந்துட்டேன்" என்றார். "புண்ணியம் செய்தவர் ஐயா நீங்கள்" என்று நான் நினைத்துக் கொண்டேன்.

குமரகுருபரர் தங்கியிருந்த இடம் என்று சொல்லப்பட்ட இடத்திற்கு வந்ததும் சற்று நின்று கங்கையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நவநாகரிக அந்தணர் அங்கே வந்தார். அவரது மீசை "குரு" திரைப்படத்தில் வரும் கமலின் மீசை போல இருந்தது. ஆள் நல்ல வெளுப்பு, அட்சரச் சுத்தமாகத் தமிழ் பேசினார். உதட்டுக்குக் கீழே கருவண்டு போல முடியை மழிக்காமல் வைத்திருந்தார். வாயோரம் புகையிலை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளைப் பார்த்தல் அந்தணர் என்று சொல்ல முடியாது, நவநாகரிக வியாபாரி போல இருந்தார்.

நாங்கள் தமிழ் பேசுவதையும், குமரகுருபரர் குறித்துப் பேசுவதையும் கேட்டு நின்ற அவர், "நீங்க தமிழ்நாடா? தமிழ்நாட்டுல எங்க?" என்று கேட்டார். நாங்கள் விபரங்களைக் கூறினோம். அவர் எங்களுக்குக் காசியின் பெருமையையும், சில வரலாற்றுக் குறிப்புகளையும் சொல்லிவிட்டு, தான் நீராடப் போவதாகச் சொன்னார். எங்கள் குழுவில் யாரோ ஒருவர் "இரவில் நீராடலாமா?" என்று கேட்டார். அதற்கு அவர், "காசியில் நவக்கிரகங்களும் சக்தியை இழக்கின்றன. ஆகையால் இங்கு அதுபோன்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை" என்று சொன்னார். இருப்பினும் நாங்கள் நீராடமலேயே அறைக்குத் திரும்பினோம்.

(தொடரும்...)

4 Nov 2013

நாங்கள் மகிழ்ந்த தீபாவளித் திருநாள்உறவுகள் நாங்கள் ஒன்றாய் இணைந்து
ஒருவருக்கு ஒருவர் உணர்வுகள் கலந்து
மாறி மாறி பரிசுடன் புத்தாடை வழங்கி
முந்தை நிலை நினைந்து மகிழ்வதும் அழுவதும்
புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து
எங்கள் இதயத்தை எரித்து எமலோகம் சென்ற
அத்தனை உயிர்க்கும் அவிர்ப்பாகம் கொடுத்து
நான் முதலாக வருவோர்க்கெல்லாம் உவந்தமுதளிக்கும்
அன்னலட்சுமிக்கும் ஜெயலட்சுமிக்கும் வாழ்த்துகூறி
வரவிருக்கும் கிரகலட்சுமிக்கு வரவேற்பு கூறி
பல்சுவை உணவைப் பகிர்ந்துண்டு
சுவைமிகு சொற்போர் பல நடத்தி
மகிழ்ந்த தீபாவளித் திருநாளே!


                           - N.பிரபா பிரேம்குமார்

தீபாவளியை முன்னிட்டு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த எங்கள் சித்தி திருமதி.N.பிரபா பிரேம்குமார் அவர்கள், எங்களோடு மகிழ்ந்திருந்த போது வடித்த கவிதை.

இடையே அன்னலட்சுமி என்று எனது மனைவிக்கும், ஜெயலட்சுமி என்று எனது தம்பியின் மனைவிக்கும் வாழ்த்து கூறி, எனது  கடைசி தம்பிக்கு வரவிருக்கும் மனைவிக்கு வரவேற்பு கூறியிருக்கிறார்.

சொற்போர் எங்கள் வீட்டில் தினமும் நடைபெறுவதுதான்.

நினைத்த நொடியில் பாட்டெழுதும் ஆற்றல் பெற்றிருந்தும், பெண் என்ற காரணத்தால் உலத்தின் பகட்டு வெளிச்சத்தில் மறைந்திருக்கிறார் எனது சித்தி திருமதி. N.பிரபா பிரேம்குமார்

அன்பு நாய்க்குட்டி


விதியின் போக்கை யார்தான் அறிவார்
இரண்டு கைக்குள் அடங்கும் அந்த ஜீவன்
செய்த சேட்டைதான் எத்தனை? எத்தனை?
சின்ன சின்ன பற்கள் கொண்டு
மெல்ல மெல்ல கடிப்பதும்
காதைக் காதை ஆட்டிக் கொண்டு
காலைத் தூக்கி அடிப்பதும்
அங்குமிங்கும் ஓடிக்கொண்டு
மலஜலத்தைக் கழிப்பதும்
பாலைக் கொட்டி வைத்தவுடன்
நக்கி நக்கி குடிப்பதும்

அந்தோ! எந்தப் பாவியின் நச்சுபார்வை
அதன்மேல் பட்டதோ
குடித்த பால் ஈரம் காயுமுன்னே
எமன் அடித்த விதம்தான் என்னே!

மின்சாரம் தடைபட்டுப் போனதுவும் விதியோ
அழகிய கயிறு கொண்டு கட்டியதும் விதியோ
இருளிலே சோறு போட போனதுவும் விதியோ
மாடிக்குப் போன மகனை விரைந்துவா என்று
அன்புக் கட்டளை இட்டதுவும் விதியோ
அம்மாவின் கட்டளைக்கு மகன் அடிபணிந்து வந்ததுவும் விதியோ

ஒரு நிமிட நேரத்திற்குள் அத்தனையும் முடிந்தது
செம்பவளக் காட்டிடையே வெண்சங்கு கிடந்தது போல்
உயிர் துடி துடித்து அடங்கியது
அத்தனை பேர் இதயமும் துடித்து அடங்கி இயங்கியது
உயிர் பிரிந்ததை அறிந்து பார்க்க வந்தது போல்
மின்சாரம் பளிச்சென்று பாய்ந்து வந்தது.

- மகனின் கால்பட்டு உயிரிழந்த நாய்க்குட்டியைப் பிரிந்த துயர் தாளாமல் எனது சித்தி N.பிரபா பிரேம்குமார் எழுதியது.

1 Nov 2013

துணை கேட்கலாமா நீ

சட்டென்று எழுந்து கிழவிக்கு
இடம் கொடுத்தான்
இரக்கத்தால் என்று நினைத்தேன்
பின்னால் நின்றாய் நீ
உன் கை மேல் கை வைத்து பிடித்தான்
நீ தடுக்கவில்லை

மகளே!
இளவரசன் உடலைத்
தோண்டி தோண்டி எடுத்து
நாறடிப்பது தெரியவில்லையா?

6 Sep 2013

பாண்டவர்கள் சிறுமையானவர்களா? அறமற்றவர்களா?பாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து, ஏமாற்றியே தங்கள் எதிரிகளை  வீழ்த்தியிருக்கின்றனர். ஆகையால் யார் நல்லவர்கள் பாண்டவர்களா? கௌரவர்களா? என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது!

13 Aug 2013

சோ - சின்னக்குத்தூசி - பெரியார் - தேசபக்தி?துக்ளக்ஆசிரியர் சோ கூறினார்.

…. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதும் நீடித்தது. இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும்விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும்விட்டுவிட்டுப் போகாதீர்கள்! என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது.
(குமுதம்: 03-02-2000)

11 Jun 2013

யாரிந்த மோடி?

எங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே! யாரிந்த மோடி?

இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தினகரனில் வந்திருந்த ஒரு கட்டுரை அவருக்கு ஆதரவாக இருந்தது.

தமிழ்நாட்டில் (மீடியாக்களில்) மோடிக்கு ஆதரவு கிடைப்பதென்பது அரிதான விஷயமே! இருப்பினும் ஒரு திராவிட ஏடான தினகரனிலேயே மோடிக்கு ஒரு அப்ளாஸ் கிடைத்திருப்பது சாதாரண விஷயமில்லை.

8 Jun 2013

பூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

19 May 2013

தனி ஈழத்தை அமைக்க உதவும் இரட்சகர் யாசின் மாலிக்திராவிடத்தையே (ஆரியத்தையும் சேர்த்துத்தான்) அந்நியமென்று நினைக்கும் "நாம் தமிழர்" கட்சிக்கு, இப்போது இஸ்லாமியப் பிரிவினைவாதி யாசின் மாலிக் சகோதரனாகத் தெரிகிறார். தங்கள் கட்சிக் கூட்டமொன்றில் (வீழ்வோம் என்று நினைத்தாயோ! இன எழுச்சி கருத்தரங்கமாம்) யாசின் மாலிக்கை அழைத்து பேசவும் வைத்திருக்கிறார் சீமான். யாசின் மாலிக் அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார்? "இலங்கையில் ஆயிரக்கனக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா? என்று எண்ண தோன்றுகிறது.

15 May 2013

பகத் சிங் நாத்திகரா?


இன்று திரு.ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான ஒரு கடிதம் என் மனதைக் குடைந்தது.

அக்கடிதம் பகத்சிங்-எழுதிய கடிதங்களைப் பற்றிவரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன. என்று எப்போதோ ஜெயமோகன் எழுதியிருந்ததைச் சுட்டிக் காட்டிக் கண்டித்தது. அந்தக் கடிதத்திற்கு சில விளக்கங்களைக் கொடுத்திருந்தார் திரு.ஜெயமோகன் அவர்கள். அவரது பதில் சற்று யோசிக்க வைத்தது.

12 May 2013

மேலகத்தின் இறவாதவர்கள் (The Immortals of Meluha)தலைப்பு ஒன்றும் விளங்கவில்லையா? விஷயத்தைச் சொல்லாமலே விளங்கவில்லையா என்று கேட்கிறீர்களே! என்கிறீர்களா? 

"The Immortals of Meluha" என்பது கல்கத்தாவைச் சேர்ந்த அமிஷ் திரிபாதி என்ற அறிமுக எழுத்தாளர் எழுதிய ஆங்கில நாவலாகும். Siva Trilogy என்ற தொகுப்பின் முதல் நாவலான The immortals of Meluha இந்தியா முழுவதிலும் பெரும் வெற்றிபெற்ற ஒரு படைப்பாகும். இந்த நாவலை இன்றுதான் படித்து முடித்தேன். படித்து முடித்ததும் பெரும் திருப்தி கொண்டேன். ஆகையால், இது குறித்து ஒரு விமர்சனம் எழுத வேண்டும் என்று எழுத விழைகிறேன்.

9 May 2013

இது தீவிரவாத செயல் இல்லையா?

ஒரு கிறிஸ்தவ அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கை எனக்குக் கிடைத்தது. வரிக்கு வரி அதைப் படித்துப் பாருங்கள். கீழ்கண்ட இந்தத் துண்டறிக்கை தனிச்சுற்றுக்கு மட்டுமே (கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே) அளிக்கப்படுவதாகும். இவர்களின் நோக்கம் தான் என்ன? இவர்கள் இந்த தேசத்தை இரட்சிக்கப் போகிறார்களா??? அல்லது????????????????????? நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். (குறிப்பாக இடது புறத்திலுள்ள 4, 5, 6 பேராக்களைப் படிக்கவும்)
இந்தியா?... சீனா?.. நாம் எங்கே செல்கிறோம்.
கீழ்க்கண்ட இரண்டு செய்திகளைப் படியுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் உண்மை முகங்களையும் காணுங்கள். நாம் ஏற்கனேவே சீனாவிடம் தோல்வி கண்ட ஒரு தேசம். உலகத்திலேயே இந்தியாவுக்கு பெரிய எதிரி சீனாதான் என்று தைரியமாகச் சொன்ன ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்தான். கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்துவிட்டு நேர்மையான நெஞ்சம் கொண்டவர்கள், நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்பது யாது? அதன் கொள்கைகள் என்ன? அது யாருக்காக உழைக்கிறது. கடந்த காலப் பார்வையோடு இணைத்து வருங்கால நிகழ்வுகளைக் கணித்துப் பாருங்கள். சீனா நமது நண்பனா? எதிரியா? கம்யூனிஸ்ட் கட்சி என்பது (அது எந்த கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரிதான்) உளவு நிறுவனமா அல்லது இந்தியாவுக்கு ஆபந்தாந்தவனா? நன்மக்களே முடிவு செய்வீர்! (இலங்கையின் ராணுவத்தளவாடம் அமைக்கும் அதே சீனாதான் காஷ்மீரத்தையும் அபகரிக்கிறது. சீனப் பிரதம் இந்தியா வருவதற்கு சில காலத்திற்கு முன் இப்படி நிகழ்வது தற்செயலானதா? ஏற்பாடு செய்யப்பட்டதா? தமிழக மீடியாக்கள் ஏன் இந்த செய்திக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்கின்றன? பழங்கலாத்திலிருந்து பல காலங்களாக சீனாவுக்கு, ஆன்மிகத்தில் ஆகட்டும், தத்துவத்தில் ஆகட்டும், பொருளாதாரத்தில் ஆகட்டும். இந்தியாவே வழிகாட்டி தேசமாக இருந்திருக்கிறது (மாவோ வந்த பிறகு வேறு கதை என்பது வேறு). இன்று சீனா நமக்குப் பாடம் கற்பிக்கிறதோ என்று தோன்றுகிறதா? நன்மக்களே சிந்திப்பீர்! (இத்தாலிய அடிவருடி) காங்கிரஸ், கம்யூனிச உளவு நிறுவனங்கள் இதற்கு மத்தியில் நாம் அடுத்த நாடாளுமன்றத்திற்கு நாம் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.?.... சிந்திப்பீர்.... (மோடியாக இருந்தால் இந்தியா பிழைக்கும்.)

(http://mahabharatham.arasan.info என்ற வலைப்பூவில் மஹாபாரதத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதால் அரசியல் சமூகம் குறித்த கட்டுரைகளை இட முடியவில்லை. மன்னிக்கவும்.)

24 Mar 2013

பரதேசி - வெல்வான்

சினிமாவுக்கென்று நான் தனி வலைப்பூவில் பதிவுகளை இடுகிறேன். எப்போதாவது கவனத்தைக் கவரும் வண்ணம் வரும் படங்களுக்கு மட்டுமே அதில் விமர்சனம் எழுதுகிறேன். அதன் லிங்க் சினிமா/டிவி: பரதேசி - வாழ விடுங்க நியாயமாரே.

பரதேசி குறித்த எனது விமர்சனத்தை அங்கே பார்க்கலாம். இந்தப் பதிவு பரதேசி திரைப்படத்தின் விமர்சனங்களை ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதற்காகப் பதியப்படுகிறது.

எனது நண்பர் ஒருவர் செஞ்சிந்தனைக்காரர், அவர் ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தார். அவரது விமர்சனத்தையும், அதற்கு எனது மறுமொழிகளையும், அந்த மறுமொழிகளுக்கு அவரது மறுமொழிகளையும் இந்த லிங்கில் காணலாம் பரதேசி - தேனீர் கோப்பையில்.

8 Mar 2013

"காவிரிப்பூம்பட்டினம்

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

8 Feb 2013

இடதுசாரிகளின் "விஸ்வரூப"ப் பார்வை!இடதுசாரி இளைஞர்களைக் கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI)த்தின் மாத இதழான "இளைஞர் முழக்கம்" எனக்கு மாதந்தோறும் வரும். அப்படியே இந்த 2013 பிப்ரவரி இதழும் வந்தது. எனது தந்தை அதைப் படித்துக் கொண்டிருந்தார். அவர் தலையங்கத்தைப் படிப்பது எனக்குத் தெரிந்தது. என் தந்தைக்குப் பின்னால் நின்று தலையங்கத் தலைப்பை உற்றுப் பார்த்தேன். "இனி விஸ்வரூபமாய் கிளம்பும்.." என்றது தலைப்பு.

நான் அந்த தலையங்கத்தைப் படிக்காமலேயே எனது தந்தையிடம், "அப்பா, இந்தத் தலையங்கம் எப்படித் தெரியுமா இருக்கும்? விஸ்வரூபத்திற்கு தடையை ஏற்படுத்திய இஸ்லாமிய அமைப்புகளைப் பெயரளவில் கண்டித்து, மற்றபடி இந்து அமைப்புகளை அடி அடி என்று அடித்திருப்பார்கள்." என்றேன்.

எனது தந்தை, "படிக்க விடுடா" என்றார்.

சரி படிக்கட்டும் என்று நான் எழுந்து உள்ளே சென்றுவிட்டேன். காலை உணவு அருந்தி விட்டு, எனது தந்தையின் அருகில் அமர்ந்து இன்று வந்த "தினகரனை"ப் புரட்டினேன்.

எனது தந்தை, "என்னவோ சொன்னே, தலையங்கம்  நல்லாத்தானேடா இருக்கு, சரியாத்தான் சொல்லியிருக்காங்க, நீ சொன்ன மாதிரியெல்லாம் இல்லை." என்றார்.

நான், "என்னப்பா சொல்றீங்க, சான்சே இல்லையே, எங்கே பத்திரிகையக் கொடுங்க பாப்போம்" என்று சொல்லி இதழை வாங்கினேன். கட்டுரையைப் படித்தேன். அத்தலையங்கம் கீழ்வருமாறு. (இளைஞர் முழக்கத்தின் இணையதள முகவரி  www.mattru.com என்று அந்தப் புத்தகத்தில் கொடுத்திருந்தார்கள். அதற்கு லிங்க் கொடுத்து வாசகர்களை அக்கட்டுரையைப் படிக்க வைக்கலாம் என்று பார்த்தேன். அந்த இணையம் செயல்பாட்டில் இல்லை போலும், அதனால் நானே தட்டச்சிட்டு கீழே தருகிறேன். கீழ் வரும் கட்டுரை இளைஞர் முழக்கம் 2013 பிப்ரவரி இதழின் தலையங்கமாகும்.)


இளைஞர் முழக்கம் - தலையங்கம்

"இனி விஸ்வரூபமாய் கிளம்பும்.."

இன்னும் சில வருடங்களில் இந்தியாவிற்குள் பல நூற்றுக்கணக்கான தணிக்கை அமைப்புகள் உருவாகும் ஆபத்து இப்போது உருவாகத் துவங்கியிருக்கிறது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, மத சகிப்புத்தன்மையும், ஜனநாயகமும், சுதந்திரமும் கொண்ட நாடு. வேற்றுமையிலும் ஒற்றுமை உள்ள நாடு என்ற பெருமை நாளைய தலைமுறைக்குப் போய்ச்சேருமா என்று தெரியவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத சமூகமாக இந்தியச் சமூகத்தை மாற்றுவதற்கான அரசியலை, மிக லாவகமாய் நிகழ்த்துகிறார்கள். சொந்த பாரம்பரியங்களே, சுய பெருமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் என்ற பெயரில் அடையாளங்களின் மீதான அரசியலை வன்மத்துன் செய்கிறார்கள் சில அரசியல் இயக்கங்கள்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி நடைபெற்றுள்ள நடப்புகள், எதிர்கால இந்தியச் சமூகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கவலையும், விவாதமும் ஒரு சேர நம்முன் நிற்கின்றன. விவாதிக்காமல் விலகிச் செல்லுதல் எந்த வகையிலும் நல்லதல்ல.

ஒரு திரைப்படம் அல்லது எந்தவொரு படைப்பாய் இருந்தாலும், அது படைப்பாளியின் கருத்தியலோடு இணைந்தது. படைப்பின் சிறப்பையும், படைப்பாளியின் பங்கையும் தேவைக்கேற்ப சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது மிக அவசியமாகும். பாரபட்சமற்ற விமர்சனமும், பாராட்டைப் போல் மிக இணையான முக்கியத்துவம் கொண்டதாகும். சமூகம் குறித்து சிந்திக்கும் படைப்பாளிகளுக்கான, கலைஞர்களுக்கான அங்கீகாரத்தை சமூகம் நிச்சயம் வழங்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் அப்படியான ஒரு அங்கீகாரத்துக்கு முழுத்தகுதி உள்ளவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பாளி எனவும் கூற இயலாது.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்தவர். "ஹேராம்", "என்னைப் போல் ஒருவன்", "அன்பே சிவம்" ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகமயமாக்கலுக்கு எதிராகவும், மதவெறிக்கு எதிராகவும், மதச்சகிப்புத் தன்மைக்காவும் ஓங்கிக் குரல் கொடுத்த கலைஞர் நாத்திகப் பிரச்சாரத்தையும் தன் திரைப்படங்களில் கொண்டு வந்த அவருடைய முயற்சி, பெரியார் சிந்தனைகளின் வெளிப்பாடாகும். மத சகிப்புத்தன்மைக்கான கூட்டங்களிலும், அமைப்புகளிலும் நேரடியாகச் செயல்பட்டளவில் இயங்கியவர். அவருடைய படைப்பான "விஸ்வரூபம்", இதை நீங்கள் வாசிக்கையில் எந்த வகையான புதுப் பிரச்சனையைச் சந்திக்கும் என முன்கூட்டியே சொல்ல இயலவில்லை. அவர் எது செய்தாலும் சரி என்று வாதிடுவது பகுத்தறிவல்ல. எனினும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு மாபெரும் கலைஞன் கமல்ஹாசன் என்பதையும், அவருக்காக தமிழகம் குரல் எழுப்ப வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. மேலும், அவரின் படைப்பை, அதன் கருத்தியலை விமர்சனம் செய்யாமல் தடை செய்ய வேண்டும் என்று நேரடியாகக் கோருவதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதுவே பொருந்தும்.

ஒரு படைப்பு ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் கருதினால், அப்படைப்பை எதிர்க்கும் உரிமையும், அதைப் புறக்கணிக்கும் உரிமையும் அவர்களுக்கு முழுமையாக உண்டு. எதிர்ப்பை ஒரு படைப்பாகவும் வெளியிடலாம். அதே நேரத்தில், இரு பிரிவு மக்களுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து, ஒரு படைப்பை உருவாக்கி, அவர்களிடேயே மோதலை உருவாக்கும் சூழல் ஏற்படுத்தி, சமூக அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நிலை உருவானால், அப்படைப்பை தடை செய்யவும் கோரலாம். தவறில்லை. ஆனால், இப்போது மோதல் புதிய வடிவத்தில் உருவாகிறது.

இஸ்லாம் மக்களுக்கு விரோதமானது என்று கூறி அதைத் தடை செய்திட இஸ்லாம் அமைப்புகள் போராடி வருகின்றன. இச்சூழலைப் பயன்படுத்தி இந்து மதவாத அமைப்புகள், தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, எதிரியாகக் காட்ட இஸ்லாம் அமைப்போ அல்லது கிறிஸ்தவ அமைப்போ ஒரு ஊரில் இருக்க வேண்டும், அவர்கள் ஏதாவது செய்தால் போதும், பார்த்தீர்களா, நம்ம நாட்டில் வந்து அவங்க இப்படிப் பண்ணுறாங்க, அனுமதிக்கலாமா? என்று இந்து மதவாத அமைப்புகள் தங்கள் மதவாதச் செயலைத் தீவிரமாகக் கொண்டு செல்வதற்கான அரசியல் சூழலாக இதைப் பயன்படுத்திவிடுகின்றனர். இப்போதும் அப்படித்தான், "ஆதிபகவான்" படத்திற்கு தடை விதிக்க வேண்டுமாம், அது இந்துக் கடவுள்களை கேவலப்படுத்துகிறதாம், ஏற்கனவே, "ராம்" என்று பெயர் வைத்து, அவரை மனநோயாளியாக காண்பித்து விட்டார்களாம். இது காண்பிக்க வேண்டுமாம். எங்கள் சாதிப்பெண்ணை, அந்தச் சாதிக்காரன் காதலிப்பது போல் எப்படிக் காட்டலாம், இதனால் எங்க சாதிக்கு அவமானம் என நாளை வேறொருவர் சொல்லலாம். எங்க ஊரைப்பற்றி, இப்படி எப்படிக் காட்டலாம் என மற்றொருவர் குரல் எழுப்பலாம். எல்லாரும் நான் பார்த்த பின்னதான், படம் திரைக்கு வரணும்னு முடிவெடுத்தால் என்னவாவது?

இஸ்லாம் அமைப்பிற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடவும், மக்களின் பொதுப்புத்தியில் சில கருத்துகளை ஏற்றவும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர் இந்து மதவாத அமைப்புகள். இது நல்லதல்ல என்பதே நமது கவலை.
"இஸ்லாம் மக்களுக்கு விரோதமானது என்று கூறி அதைத் தடை செய்திட இஸ்லாம் அமைப்புகள் போராடி வருகின்றன" என்று ஒற்றை வரியில் கண்டிப்பாக இல்லாமல் செய்தியாகச் சொல்லிவிட்டு, மீதி அனைத்துமே இந்து அமைப்புகளைக் கண்டித்தே இருப்பதை எனது தந்தைக்குச் சுட்டிக்காட்டினேன்.

"ஆமாண்டா யாருக்குமே தெரியாதத நீ கண்டுபிடிச்சு சொல்லிடே.  உண்மையைத் தானேடா சொல்லியிருக்காங்க" என்றார்.

"எது உண்மை? அதுசரி, நான் சொன்னமாதிரி எதுவுமே வரவில்லைனு சொன்னீங்களே" என்றேன்.

கேட் திறந்து, எனது தந்தையின் நண்பர் வந்தார், அவர் ஒரு கிறிஸ்தவர், ஏற்கனவே விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது என்று கேள்விப்பட்டவுடன் இஸ்லாமிய அமைப்புகளை வசைபாடியவர், "கடல்" படத்திற்கு, கிறிஸ்தவர்கள் போராடியபோது, கிறிஸ்தவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று முரண்பட்டு வாதிட்டவர். இப்போது கேட்டைத் திறந்து கொண்டு வந்தார்.

சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து, என் தந்தையை விடுத்து அவரிடம்  இந்தத் தலையங்கத்தைக் காட்டி, இதைப் படித்து பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள் என்றேன்.

"சார், வேண்டாம். அவன் முரண்பாட்டோ மொத்த உருவம், கண்டதக் கேப்பான்" என்றார் என் தந்தை.

என் தந்தையின் எச்சரிக்கையை மீறி அந்த இதழை வாங்கிப் படித்தார் எனது தந்தையின் நண்பர். "சூப்பரா எழுதியிருக்கார்" என்று சொல்லி என்னிடம் புத்தகத்தைக் கொடுத்தார்.

"இந்தக் கட்டுரையை எதற்காக எழுதியிருக்கிறார்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.

"விஸ்வரூபம் படத்தை தடை செஞ்சத எதிர்த்து எழுதியிருக்காங்க" என்றார்.

"யார், அந்தத் தடையை ஏற்படுத்தியது?" என்றேன்.

"இது தெரியாதா உனக்கு, இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறதுனுதானே தடை வந்தது." என்றார்.

"அப்ப தடையை ஏற்படுத்தினவனத்தானே கண்டிக்கனும்" என்றேன்.

"ஆமாம். அதைத்தானே செஞ்சிருக்காங்க" என்றார்.

"எங்கே, இந்த முழு கட்டுரையில் "தடையை ஏற்படுத்தும் இஸ்லாமிய அமைப்புகளைக் கண்டிக்கிறோம்" என்று ஒரு வரியைக் காட்டுங்கள்" என்று திரும்ப அவரிடம் கொடுத்தேன்.

புத்தகத்தை வாங்கித் துருவித் துருவிப் பார்த்தார்.

"சரி சார், தேடியது போதும், இந்து அமைப்புகளை எத்தனை முறை குத்திக்காட்டியிருக்கிறார்?" என்று கேட்டேன்.

"ஆரம்பிச்சுட்டான் சார், இவன் வேலைய. அதான் அப்பவே சொன்னேன் வேண்டான்னு, அவன் விதண்டாவாதி சார்" என்றார் எனது தந்தை.

மேற்கண்ட விவாதங்களை மனக்கண் முன் ஓடவிட்டபோது, ஓசை வலைப்பூவில் "பகுத்தறிவின் மதவாதம் - விஸ்வரூபம் (சிறுகதை)" நினைவுக்கு வந்தது. இந்த வகையில் ஓசை ஒரு தீர்க்கதரிசி போல் என் மனக்கண் முன் தெரிந்தார்.

அந்தச் சிறுகதையில், இங்கர்சால் வேலை செய்யும் பத்திரிகையின் ஆசிரியர், எழுதித்தரும் இரண்டாவது கட்டுரையைப் போலவே இந்த "இளைஞர் முழக்கத்தின்" தலையங்கமும் எனக்குப் பட்டது.

எனது தந்தை ஒரு முன்னாள் தி.க. அனுதாபி. எனது தந்தையின் நண்பர் ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட். ஆனால் இருவருக்குமே இப்போது அவற்றில் பெரிய பிடிப்பில்லை. இப்படிப்பட்டோர் இதைப் போன்ற கட்டுரையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? இதைப் போன்ற பிரச்சனையில் பலர் (சமுதாயம்) எனது தந்தையின் நிலையிலும், எனது தந்தையின் நண்பர் நிலையிலுமே இருக்கின்றனர். இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, எந்தப் படம் தான் தடை செய்யப்பட்டது? இந்து அமைப்புகளை இந்த விஷயத்தில் கண்டிக்க இப்போது அவசியம் என்ன? அவர்களின் குரலுக்குப் பயந்து "ஆதிபகவன்" படத்தைத் தடை செய்துவிடுவார்களா?  

எப்போதுதான் உள்ளதை (உள்ளத்தை) மறைத்து சமூகத்தின் முன் தன்னை நல்லவர் (மதச்சார்பற்ற பகுத்தறிவுவாதி) என்று அடையாளம் காட்ட, இல்லாததைக் கற்பனை செய்வது நிற்கப் போகிறது?