2 Oct 2012

நான் ஏகலைவன்ஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு!

துரியோதனனும் அர்ஜூனனும் நான் வசிக்கும் இடத்திற்கருகில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். அந்த இரு இளவரசர்களுக்கும் மற்றும் சில இளவரசர்களுக்கும் குருவாக இருந்தார் துரோணர்.

ஒருநாள், துரோணர் அந்த இளவரசர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்ததை நான் கவனிக்க நேர்ந்தது. என் இடத்திலேயே, என் இனத்திலேயே பல ஆசிரியர்கள் இருந்தும், துரோணரின் பயிற்சி மேல் நான் மையல் கொண்டேன். துரோணர் என் மனக்கண் முன் பேராசானாகத் தெரிந்தார்.


நான் ஏன் அவரிடம் பயிற்சி பெறக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. உடனே ஓடினேன், கால்கடுக்க ஓடினேன், என் தந்தையிடம் எனதாவலைக் கூறினேன். எனது குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டேன். அனைவரும் சம்மதித்தார்கள். நொடி தாமதிக்காமல் மறுபடியும் ஓடினேன் எனது பேராசனைத் தரிசிக்க.

"ஏன் இப்படி ஓடி வருகிறாய்" என்று கேட்டார். "உங்களிடம் பயிற்சி பெற வேண்டும்" என்று கூறினேன். துரோணர் விழுந்து விழுந்து சிரித்தார் "நீ என்னிடமா? இவர்களை யார் என்று நினைத்தாய். இவர்களெல்லோரும் இளவரசர்கள். இவர்களுடன் சரிக்குச் சமமாக நீ பயிற்சி பெற முடியுமா? அதுவும் ஒரு காட்டுமிராண்டி என்னிடம் பயிற்சி பெறுவதா?" என்றார்.

எனது நிறமும், நடையுடைகளும் அந்த இளவரசர்களுக்குச் சமமாக இல்லாததால் இளவரசனாக நான் ஏற்கப்படவில்லை என்று கருதி "ஆசானே, நானும் இளவரசன் தான் என்றேன்". "ஓ... எந்த தேசத்து இளவரசன்?" என்றார். நான் எனது சுய விபரங்களைக் கூறினேன். "காட்டுமிராண்டி கூட்டத்திற்கு (!) ஒரு தலைவன். அந்த தலைவனுக்குப் பிறந்தவன் இளவரசன், என்ன திமிர் உனக்கு. தாமதிக்காமல் ஓடிப்போ... இங்கு நீ கல்வி பெற முடியாது?" என்று விரட்டிவிட்டார்.

நான் ஓடிவந்துவிட்டேன். எனக்கு அவர் மீது பயமும் மரியாதையும் வந்ததே தவிர, ஒரு துளி கூட கோபமோ, அவமானமோ ஏற்படவில்லை (!). என் மக்களைத்தான் எனக்குக் கேவலமாக நினைக்கத் தோன்றியது. அந்தக் கூட்டத்தில் பிறந்ததால்தானே எனக்கு இந்த அவமானம் நேர்ந்தது. அவர் மகான், பேராசான் அவர் எப்படித் தவறாக ஒன்றைச் சொல்லக்கூடும்.

எனக்குப் பயிற்சி மறுக்கப்பட்டாலும், ஒவ்வொரு நாளும் அவர்கள் பயிற்சியை ஒளிந்திருந்து கவனிப்பேன். என் இல்லம் நோக்கி விரைவேன். அவர்கள் செய்த பயிற்சியை நானும் பயின்றேன். பல நாட்கள் கழிந்தன. இப்போது நான் ஒலியைக் கேட்டே, அந்த ஒலி எழுப்பிய விலங்கை அடிக்கும் அளவுக்கு திறமை பெற்றிருந்தேன். 

ஒரு அமாவாசை இரவு, நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அதிர்ந்து எழும்பினேன். தூரத்தில் நாய் குரைக்கும் ஓசை. ஓசையடங்கியதும் மறுபடியும் கண் அயர்ந்தேன். மீண்டும் அதிர்ந்து எழுந்தேன். மறுபடியும் அதே ஒலி, சிறிது நேரம் எழுந்து உட்கார்ந்தேன். ஒலி நிற்கவேயில்லை. காலையிலிருந்தே பயிற்சி மேற்கொண்ட களைப்பு என்னை வாட்டியது. அந்த நாயின் மீது எனக்கு மிகுந்த கோபமும், கொலைவெறியும் ஏற்பட்டது. வில்லம்பை எடுத்தேன். ஒலி வந்த திக்குக்கு ஒரு நூறு கணைகளை அடித்தேன். குரைப்பொலி நின்றது. நிம்மதியாகப் படுத்துறங்கினேன்.

இரவு வெளுத்து, பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்தேன். தூரத்தில் துரோணரும், அவரது சீடர்களும் வந்து கொண்டிருந்தனர். இன்று அவரிடம் எப்படியும் நல்லபெயர் பெற்றுவிடுவது என்றெண்ணி மிகவும் வேகமாக அவரை எதிர்கொண்டழைக்கச் சென்றேன். அவர் கைகளில் எனது கணையொன்றை வைத்திருந்தார். "இந்தக் கணை யாருடையது?" என்றார். நான் "என்னுடையது, ஆசானே" என்றேன். "எதற்காக கணையடித்தாய்?" என்றார். நான் விபரங்களைக் கூறினேன். "அற்புதமான திறமை? நீ மிகுந்த திறமைசாலி. எங்கிருந்து கற்றாய் இத்திறமைகளை?" என்றார்.
     
      'வசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற மகிழ்ச்சி' எனக்குத் தலைகால் புரியவில்லை. "சுயமாகக் கற்றேன்" என்றேன் பெருமையாக. "அப்படி இருக்கவே, இருக்காது. உண்மையைச் சொல்?" என்றார். நான் உண்மையைச் சொன்னேன்.

"ஆக, குருவுக்குக் காணிக்கை செலுத்தாமல், திருட்டுத்தனமாகப் பயிற்சி எடுத்திருக்கிறாய். அல்லவா?" என்றார். எனது தற்பெருமை மறைந்து அவரிடம் "ஆசானே, காணிக்கை செலுத்தத் தயாராயிருக்கிறேன்." என்றேன். "காணிக்கை எதுவாயிருந்தாலும் செலுத்துவாயா?" என்றார். "கட்டாயம் செலுத்துவேன்" என்றேன்.

"உனது வலக்கைக்கட்டைவிரலை எனக்குக் காணிக்கையாகத் தா?" என்றார். நான் தாமதிக்காமல் விரலைச் சீவி எனது ஆசானுக்குப் பரிசாக அளித்தேன். அவர் அதிர்ந்தார். எனது தலை மீது கை வைத்து (!) ஆசி கூறினார். எனக்கு விரல் போனதைப் பற்றிக் கவலையே இல்லை. எனது ஆசானின் ஆசி எனக்குக் கிடைத்துவிட்டது. நான் பெருமகிழ்ச்சியடைந்தேன்.
மீண்டும் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டேன். என் கண் அயர்ந்து, உடல் வலுவிலந்தாலும் விடவில்லை அவ்வளவுத் தீவிரமான பயிற்சியை (!) மேற்கொண்டேன். கட்டைவிரல் போனாலென்ன? அதே திறமையை மீண்டும் அடைந்தேன். பல போர்களைக் கண்டேன். எனது திறமைகளை நிரூபித்தேன்.

இதற்குள் வேகமாகக் காலம் நகர்ந்திருந்தது. இன்று எனது ஆசானிடம் பயிற்சி மேற்கொண்ட இளவரசர்கள் எதிரெதிர் அணிகளில் நின்று குருட்சேத்திரத்தில் சமர்புரிந்து கொண்டிருந்தார்கள். அர்ஜூனன் அந்த இடைப்பயல் தயவாலே பல தந்திரங்களைக் கற்று வந்திருக்கிறான். துரியோதனனுக்கோ எனது ஆசானின் துணை மட்டுமே.

நான் எந்த அணியைத் தேர்ந்தெடுப்பது... துரோணரின் அணியைத்தான். ஆனால் என்னால் நகரமுடியவில்லையே ஏன்? எங்கே எனது உடலைக் காணோம் வெறும் காற்றுதானே இருக்கிறது. நான் மரணித்துவிட்டேனா? ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும். எப்போது மரணித்தேன்?

இவ்வளவு காலம் நான் யாருக்காக உழைத்தேன்? என் மக்களுக்காகவா? ஆம்! என் மக்களுக்காகத்தான். என் மக்களை நான் கனவு கண்ட சொர்க்கத்தைக் காணச்செய்ய எனது தோழர்களின் தயவோடு உழைத்தேன். ஆனால் அவர்கள் கீழ்த்தரமானவர்கள். என்னையும் பாராட்டி என் எதிரிகளையும் பாராட்டினர். அப்போதெல்லாம் என் தோழனே எனக்கு பக்கபலமாக இருந்தான். என் தோழன்(முதலாளி)  ஜராசந்தன் எங்கே? தோழனின் வாசம் வருகிறதே! திரும்பிப் பார்த்தேன். எனது தோழன் என்னருகிலேயே இருந்தான்.

"நீ இந்தப் போரில் கலந்துகொள்ளவில்லையா? நீ எப்படி இங்கு வந்தாய்?" என்றேன். அவன் பதில் சொல்லுமுன்பே, "நான் எப்படி இங்கே வந்தேன். அதை முதலில் சொல்?" என்றேன். "தோழா! எனக்காகச் சமர் புரிந்தே நீ இங்கு வந்தாய்" என்றான். காலத்தைத் திரும்பிப் பார்த்தேன். என்ன நடந்தது?

எனது தோழன் ஜராசந்தனிடம் போர் புரிய வந்த அந்த இடையனிடம் (கிருஷ்ணனிடம்) எனது ஆசான் துரோணரிடம் கற்ற வித்தைகளை, காண்பிக்க முயன்றேன். அந்த இடையன் என்னை எமனுலகு அனுப்பிவிட்டான். துரோணர் சரியான பயிற்சியைத் தான் கற்பித்தாரா? நான் காத்திருக்கிறேன்.... எனது ஆசானுக்காகவும், அவரது சீடர்களுக்காகவும்... விடை தெரிந்து கொள்ள வேண்டும். பயிற்சியில் என்ன குறைபாடு?...

துரியோதனன் மேற்கு உலகம் என்றும், அர்ஜூனன் இந்தியா என்றும் ஏகலைவன் ஒரு இந்திய அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் என்றும், ஏகலைவனின் கட்டைவிரலை தேசபக்தி என்றும், துரோணர் பொதுவுடைமை ஆசான்களின் உருவம் என்றும் உருவகித்துப் பார்த்து மீண்டும் வாசித்துப் பாருங்கள். இதுவும் ஒரு மறுவாசிப்புத்தான். இது மொழியாக்கம் அல்ல. மறுவாசிப்பு. ஏற்றுக் கொள்வீர்களா?

6 comments:

 1. Sir, sorry to differ from you. Actually nothing is wrong with the teacher. He him self could not survive / even he could not provide a glass of milk to his son. When he met the kings - pl NOTE - they made a condition that he will teach only to Pandavas /& Gouravars . With this condition only he got a job. In other words this was a condition in the JOB contract.Secondly to day we talk about the copy wright. We cannot operate Windows 8 or xp just like that.We have to pay to Bill gates. Yes we are cheating him in INDIA, BUT I request our friend to go to US / GERMANY OR ANY COUNTRY - If we use windows as we use in INDIA - we coluld be jailed- as this is ILLEGAL. why not we argue the same ???? Today USA/ GERMANY/ FRANCE etc compell IRAN & make their life misreable, just because these countries do not want IRAN to have this technology, whereas they allow ISREL to have Nuke bombs.Sir this is reality, in all the time , all over the world we cannot always say truth will prevail.
  Lastly even the DHRON- THE Teacher- finally fought against the Dharma only - was aiding ADHARMIS.
  Unfortunately the whole EKALAIVAN story had turned into caste angle. To quote from Dinamalar article - can we take like this . KRISHNA( A YADHAVA) JOINED WITH YUDISHTRA ( A kshatriya) /conspired against a Dhronacharya( a Bhramin) How will this look like?

  ReplyDelete
  Replies
  1. இது மறுவாசிப்புதான் ஐயா. ஏகலவ்யனின் மனநிலையை வெளிப்படுத்த, அவனது எண்ணவோட்டத்தில் இருந்து இது எழுதப்பட்டது. இதை நான் எழுதவில்லை. ஏகலவ்யன் எழுதினான் என்று நினைத்துப் பார்த்தால் உங்களுக்கு இப்படித் தோன்றாது. நான் துரோணர் மீது அதிக மரியாதை கொண்டவனே.

   Delete
  2. இந்தப் பதிவு நான் மஹாபாரதம் மொழிபெயர்ப்பதற்கு முன்பு எழுதியதாகும். மேலும், இந்தப் பதிவு சாதி அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஏகலவ்யன் கிருஷ்ணனையே "அந்த இடைப்பயல்" என்று விளிப்பதாக எழுதியிருக்கிறேன். அது ஏகலவ்யனின் மனநிலை. இன்னும் கேட்டால் அந்தக் காலக்கட்டத்தில் சாதி என்ற ஒன்றே இருந்திருக்காது. வர்ணம் வேறு சாதி வேறு என்று எடுத்துக் கொண்டால்...

   Delete
  3. உங்கள் மறுவாசிப்புக் கதை அருமை. ஆனால் கடைசிக் குறிப்பில் உள்ள “துரோணர், பொதுவுடமை ஆசான்களின் உருவம்“ என்பது சரியல்லவே? நல்ல மறுவாசிப்பை இப்படிக் குழப்பிவிட்டீர்களே?

   Delete
  4. ஐயா!

   வாழ்த்தியமைக்கு நன்றி. நீங்கள் மேற்குறிப்பிட்ட குறிப்பைக் மனத்தில் கொண்டுதான் மறுவாசிப்பையே செய்தேன்.

   என் நண்பர்களுக்குள் ஒரு வாக்குவாதம். நண்பர்கள் அனைவரும் இடதுசாரிகள். நான் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாக இந்த மறுவாசிப்பை அவர்களிடம் கொடுத்தேன்.

   கண்ணை மூடிக் கொண்டு இங்கே மார்க்சியம் பின்பற்றப்படுவதன் விளைவு இந்த ஏகலைவனின் நிலையையே ஏற்படுத்தும் என்பதையும், மண்ணின் {கிருஷ்ணன்} மணம் இல்லாத எந்தத் தத்துவமும் இங்கு செல்லுபடியாகாது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டவே இந்தப் பதிவை இட்டேன். அதனாலேயே துரோணரை அப்படிப் பயன்படுத்திக் கொண்டேன். கருத்திட்டமைக்கு நன்றி ஐயா.

   Delete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.