• பகத் சிங் நாத்திகரா?



    இன்று திரு.ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான ஒரு கடிதம் என் மனதைக் குடைந்தது.

    அக்கடிதம் பகத்சிங்-எழுதிய கடிதங்களைப் பற்றிவரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன. என்று எப்போதோ ஜெயமோகன் எழுதியிருந்ததைச் சுட்டிக் காட்டிக் கண்டித்தது. அந்தக் கடிதத்திற்கு சில விளக்கங்களைக் கொடுத்திருந்தார் திரு.ஜெயமோகன் அவர்கள். அவரது பதில் சற்று யோசிக்க வைத்தது.



    எல்லா இளைஞர்களைப் போல, நானும் "பகத் சிங்" என்றால் நெஞ்சு நிமிர்த்தியே நிற்பேன். அது என்னவோ, அப்படிப்பட்ட உணர்வை அப்பெயரைக் கேட்கும்போதே எல்லோரையும் போல நானும் அடைந்துவிடுவேன். ஆனால், திரு.ஜெயமோகன் அவர்கள் சொல்வதிலும் அடிப்படை இல்லாமல் இல்லை என்றே தோன்றிற்று.

    அதைத் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பகத்சிங்-ஐக் குறித்து தேடிய போது, மற்றுமொரு குடைச்சல்,

    டிசம்பர் 26, 1925லேயே இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டுவிட்டது. பகத் மார்க்சிய ஆதரவாளராக இருந்தும், ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லை. ஏன்?... இந்திய வரலாற்றறிஞர் K.N.பணிக்கர் அவர்கள், பகத்சிங்-ஐ இந்திய மார்க்சிஸ்டுகளின் பட்டியலில் இணைக்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு என்ன? என்று கேட்டாலே, முற்போக்கு இளைஞர்கள் பகத்சிங் பெயரையும், சந்திர சேகர் ஆசாத்தின் பெயரையுமே முன் வைப்பர். ஆனால் பகத்துக்கு மார்க்சிய காதல் இருந்தும், கம்யூனிஸ்ட் கட்சியை நம்பவில்லையே, ஏன்?

    அப்படிப்பட்ட முற்போக்கு இளைஞர்களுக்கு பகத்சிங்கின் கடைசி ஆசை என்ன என்று தெரியுமா? எனக்கும் தெரியாது? அது குறித்து நான் தேடிய போது….

    விக்கி சொல்கிறது…

    பகத் சிங் நாத்திகராகவே இருந்தார்.

    காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்து முஸ்லிம் கலவரத்தால், பகத்சிங் எல்லா மதங்களின் தத்துவங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஆங்கிலேயர்களை எதிர்க்கும்போது இந்த இரு பிரிவுகளும் ஒன்றாகி தோளோடு தோள் நிற்கின்றன, மதம் என்று வரும்போது பிரிந்து, ஒன்றின் கழுத்தை மற்றொன்று பிடிக்கிறது. இந்த முரணை அவரால் புரிந்து கொள்ள முடியவல்லை. மதம் என்பது இந்திய விடுதலைக்கான போராட்டத்தை திசை திருப்பும் என்பதை ஆணித்தரமாக ஏற்று, தனது மத நம்பிக்கைகளை விடுத்து, புகாரின், லெனின், டிராட்ஸ்கி, மற்றும் அனைத்து நாத்திக புரட்சியாளர்களின் படைப்புகளைப் படித்தார் பகத்சிங். சோஹம் சுவாமி என்பவர் எழுதிய Common Sense என்ற புத்தகத்தையும் படித்தார்.

    இந்த சோஹம் சுவாமி பங்களாதேஷில் பிறந்தவர், அவர் உலகில் எல்லா மதங்களும் முரண்பாடுடயனவே என்றும், பொது அறிவே உண்மைக்கான வழி என்றும் அந்தப் புத்தகத்தில் போதித்திருந்தார். (பகத்சிங் தனது குறிப்புகளில் புத்தகத்தின் ஆசிரியரை சோஹம் சாமி என்று குறிப்பிடாமல், தவறுதலாக அவரது சீடன் நிரலம்பர சுவாமியின் பெயரைக் குறிப்பிடுகிறார். அந்தப் புத்தகத்தில் நிரலம்பர சுவாமி முன்னுரை மட்டுமே எழுதியிருந்தார்). பகத் சிங் இவை எல்லாவற்றையும் படித்து, ஒரு விதத்தில் புதிரான நாத்திகத்தையே கைக்கொண்டார். 1931ல் சிறையில் இருந்து, "நான் ஏன் நாத்திகனானேன்" என்ற புத்தகத்தை எழுதினார். அதில், "மனிதன், தனது பலவீனத்தை உணர்ந்து, தனது கற்பனையில் கடவுளைத் தோற்றுவித்தான். கடவுள் என்ற கற்பனையை நம்பி ஒருவிதத்தில் தைரியமடைந்து, சில இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து வந்தான். கடவுள் தத்துவம், துயரத்தில் இருந்த மனிதர்களுக்கு உதவி செய்தது." என்றார்.

    மற்றொரு இடத்தில் "நான் எவ்வளவு உறுதியாக இருப்பேன் என்பதைப் பார்ப்போம். ஒரு நண்பன் என்னை பிரார்த்தனை செய்யச் சொன்னான். நான் நாத்திகன் என்று சொன்னதும், உனது கடைசி நாட்களில் நீ நம்பத் துவங்குவாய் என்றான். நான் அவனிடம்: அன்பானவனே, அது நடக்கவே நடக்காது. அப்படிச் செய்தால் எனது செயல் தரம்தாழ்ந்த நம்பிக்கையற்ற செயலாக இருக்கும். இத்தகைய சிறிய சுயநல நோக்கங்களுக்காக நான் பிரார்த்தனை செய்ய மாட்டேன் என்றேன். வாசகர்களே, நண்பர்களே, இது கர்வமா? அப்படியே இருந்தாலும், நான் அதற்காகவே நிற்பேன்." என்று எழுதுகிறார்.

    சீக்கியத் துறவி ரன்தீர் சிங், லாகூர் சிறைச்சாலையில் பகத்சிங்-ஐ 4, அக்டோபர் 1930ல் சந்தித்த போது, அவர், "சில நிர்பந்தங்களால், நாட்டுக்காக, எனது முடியையும், தாடியையும் துறக்க வேண்டியிருந்தது" என்றும் "தனது சகாக்கள் சீக்கிய அடையாளத்தைத் துறக்கும்படி வற்புறுத்தினர்" என்றும், தான் அந்த அடையாளங்களால் வெட்கமடைந்ததாகவும் தெரிவித்ததாக அத்துறவி சொல்லியுள்ளார்.

    இவ்வளவும் எழுதிப் பேசிய பகத்சிங்கின் கடைசி ஆசை?...
    தூக்கிலடப்படுவதற்கு முன், அவரது கடைசி ஆசையைக் கேட்ட போது, "நான் ரன்தீர் சிங்கிடம் அமிர்த் சஞ்சார் வாங்க விரும்புகிறேன். ஐந்து நம்பிக்கைகளை மீண்டும் அணிய விரும்புகிறேன்." என்று தெரிவித்தார். ஆனால் நீதியை மறுத்த அதிகாரிகளால் அக்கோரிக்கையும் மறுக்கப்பட்டது.

    அமிர்த் சஞ்சார் என்பது, பார்ப்பனர்களின் பூணூல் சடங்கு போன்றதும், கிறிஸ்தவர்களின் பேப்டிசம் போன்றதுமாகும். ஐந்து நம்பிக்கைகள் என்பன, 1.கேசம் (நீண்ட முடி வளர்த்தல்), 2. கங்கா (மரத்தாலான சீப்பு), 3. கரா (கைகளில் அணியும் வளையம்), 4. கசேரா (போருக்குத் தயாராக, {டிரௌசர் போன்ற} உள்ளாடை அணிவது) 5. கிர்பான் (கத்தி). இந்த ஐந்து பொருட்களையும் உடலில் தரித்துக் கொள்வதுதான் ஐந்து நம்பிக்கைகள் எனப்படுகின்றன.

    ஆனால், இந்த செய்தியை இன்னும் பல அறிஞர்கள், "அவர் தீவிர நாத்திகவாதி, ரன்தீர் சொல்வதை ஏற்கமுடியாது" என்று மறுத்துக் கொண்டிருக்கின்றனர். பகத்சிங்கின் கடைசி காலப் புகைப்படங்களை உற்றுப் பாருங்கள். அவர் நீண்ட முடியுடனும், தாடியுடனுமே இருப்பார். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது, அவர் இடையில் சிகை திருத்தி, தாடியை மழித்திருந்தார். சிறையில் தாடி மழிக்கவும், சிகை திருத்தவும் மறுக்க மாட்டார்கள். இருப்பினும் கடைசியில் அவர் தாடியுடனும் நீண்ட முடியுடனுமே இருந்தார்.

    நாடகங்களிலும், பேச்சுகளிலும் அவரது கடைசி ஆசை வேறாகக் காட்டப்படுகிறது.

    பகத்சிங் நாத்திகரா?...

    மேலும் விபரங்களுக்கு விக்கியின் இந்தப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.





    4 மறுமொழிகள்:

    1. நீங்கள் நாத்திகரா? அல்லது கம்யூனிஸ்ட்டா? என்பதைவிட வரலாற்றில் வாழ்ந்த சில குறிப்பிட்ட தலைவர்கள் எப்படியிருந்தார்கள் அல்லது எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து அவர்களைப் போல் வாழ்ந்தால் அல்லது வாழ்ந்த வரலாறுகளைத் தெரிந்தால் எங்கள் லட்சியமும் வாழ்வதற்கான அர்த்தமும் கிடைத்துவிடும் என்று நினைக்கிறோம். நீங்கள் ஏற்கனவே சில தலைவர்களை மானசீகமாக நினைத்து வைத்திருப்பீர்கள். முற்போக்காக அதற்காகவும் எழுதியிருப்பீர்கள். பிரச்சனை என்னவென்றால் நாம் தலைவர்களாக நினைத்துவைத்திருக்கும் தலைவர்கள் அவர்களுடைய கொள்கைகள் சமூகத்தில் எந்தமாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது? அல்லது எந்த சமூகத்திற்கு பயன்பட்டிருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடைதேடினால் இந்த தலைவர்களும் அல்லது அவர்களின் கொள்கைகளும் சமூக மாற்றத்திற்கான தடைகற்களாகத்தான் செயல்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதற்காக அவர்கள் போராடவில்லையா என்று கேள்வி வரும். போராடினார்கள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று போராடினார்கள் என்பதுதான் இங்கு தெரிந்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற CPI. CPIM அல்லது மாவோயிச அமைப்புகளாக இருந்தாலும் சரி அல்லது முற்போக்கு பேசுகின்ற போலி இடது அமைப்புகளாக இருந்தாலமும் சரி எழுச்சி பெற்றுவருகின்ற அல்லது எழுச்சிகளை நசுக்கி திசைதிருப்பி இந்த முதலாளித்துவ சமுதாய அமைப்பைத் தக்கவைக்கும் வரலாறுகளைத்தான் கொடுத்துள்ளன. அதற்கு மார்க்ஸின் கம்யூனிசம் என்றால் என்ன? அவர் இந்த சமூகத்தைப் பற்றியும் சமூக மாற்றத்தைப் பற்றியும் என்ன சொல்லியுள்ளார்? அதன்பின்னர் அதன் தொடர்ச்சியாக லெனின் என்ன சொல்லியுள்ளார் என்பதை தேடிப்
      படித்தீர்கள் என்றாலே உங்களுக்கு ஓரளவு புரிந்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கம்யூனிசத்தைப் பற்றி பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் தங்களுக்கு எற்றாற்போல் எழுதியும் திரிபு படுத்தியும் எழுதியிருக்கிறார்கள். அதற்கு மார்க்ஸின் ”கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற சிறிய புத்தகம் போதுமான விளக்கங்களைக் கொடுத்துள்ளது. நியு செஞ்சுரி புத்தககடையில் உள்ளது. அல்லது கீழ்வரும் தளத்திலும் உள்ளது. http://www.wsws.org/tamil/category/books/CM/index.htm உங்கள் எழுத்தில் தேடல் இருக்கிறது அதற்கு பயனுள்ள இடத்தில் விதைத்தால் நாளை ஒரு வரலாறு. இல்லையேல் வரலாற்றை எதிர்த்துநிற்கும் பகுதியில் நிற்பீர்கள் அவ்வளவுதான் வித்தியாசம். இன்று சமூகத்தில் நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகளை புரிந்துகொள்ளவும் அதற்குள் இருக்கும் சமூக புரிந்கொள்வதற்கும் மார்க்சிஸ விஞ்ஞானம் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. மார்க்சிசம் ஒரு விஞ்ஞானமாய் புரிந்கொள்ளாதவரை...

      ReplyDelete
      Replies
      1. மறைந்த வரலாற்றை திரும்பச் சொல்வது என்பது வரலாற்றை எதிர்த்து நிற்பதா என்று எனக்குப் புரியவில்லை. சோசலிச விஞ்ஞானம், மார்க்சிச விஞ்ஞானம் எல்லாம் நமது பூமியில் சாத்தியப்படுமா? இவை பல இடங்களில் தோல்வியில்தானே முடிந்திருக்கின்றன. முழு சோஷலிச நாடு என்று ஒன்றையாவது வரலாற்றில் இருந்து எடுத்துக் காட்டினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இடதுசாரிகள் சொல்லும் எல்லாமே விஞ்ஞானம், மற்றவர் சொன்னால் பழைமைவாதமா? இந்தப் பதிவில் பகத்சிங்-ஐ குறைத்து மதிப்பிட்டு நான் எழுதியிருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள் என்றால், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை நான் படித்திருக்கிறேன். மூலதனம்தான் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் அதில் எனக்குத் தெளிவு ஏற்படவில்லை. முயன்று வருகிறேன்.

        Delete
    2. விக்கீபீடியாவில் உள்ளதை எல்லாம் ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது... பகத்சிங் மதபற்று உள்ளவர் என்ற கருத்தை ஏற்கனவே ABVP அமைப்பினர் பரப்பிவருகின்றனர். இவ்வமைப்பின் பேனர்களில் எப்போதும் டர்பன் கட்டிய பகத்சிங் இருப்பார். தப்பிதவறி கூட தொப்பி அணிந்த பகத்சிங்கின் படத்தை இவர்கள் பயன்படுத்தமாட்டார்கள். இரண்டாவது பகத்சிங் காலகட்டத்தில் பொதுவுடமை இயக்கம் என்பது ஒரு சில நபர்களை மட்டும் கொண்ட சிறிய அமைப்பு. சோகலிசத்தின் தாக்கத்தால், இந்திய பொதுவுடமை கட்சியிக்கு அப்பாற்பட்டே பல இடதுசாரி அமைப்புகள் இந்தியாவில் இயங்கியுள்ளன. எனவே பகத்சிங் பொதுவுடமை இயக்கத்தை புறக்கணித்தார் என்பதெல்லாம் கருத்து திணிப்பு தவிர வேறேதும்மில்லை

      ReplyDelete
      Replies
      1. பொதுவுடைமையே இறுதித்தீர்வு. மார்க்ஸே சொல்லிவிட்டார். இந்தியர்கள் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்பதெல்லாம் கருத்துத் திணிப்பு இல்லையா தோழர்? பல இடங்களில் தோல்வி கண்ட ஒரு சித்தாந்தத்தைத் திரும்பத் திரும்ப மக்களிடம் குமட்டக் குமட்டத் திணிப்பது கருத்துத்திணிப்பு இல்லையா தோழர்? பகத்சிங் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததா? இல்லையா? இருந்தால் மார்க்சிய காதலரான அவர் ஏன் அதில் சேரவில்லை?

        Delete

    நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

    கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

    சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.

     

    copyright

    MyFreeCopyright.com Registered & Protected
    © All Rights Reserved | www.arasan.info | Blog

    About

    இந்தியன் குரல்

    இந்தியன் குரல்
    Voice of Indian