Bread of Life Ministries (ஜீவ அப்பம்) என்ற வலைப்பூவிலிருந்து எனது நான் இந்துவா? பதிவிற்கு மறுமொழி வந்திருந்தது. அந்த மறுமொழிக்கான பதில் பெரியதாக இருப்பதால் இன்னொரு பதிவாக இடுகிறேன். அவர் கூறியிருக்கும் கருத்துக்களை பச்சை நிற பின்னட்டையிட்டு காட்டியிருக்கிறேன்.
// தங்கள் மதத்தை எப்படியாகிலும் உயர்த்தி காண்பித்து விட வேண்டிடும் என்று போராடினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.//
என் பதிவில் என் மதத்தை நான் உயர்த்திப் பிடித்தேனா? அல்லது ஜெயமோகன்தான் உயர்த்திப் பிடித்தாரா? நன்றாக மீண்டும் வாசித்துப் பாருங்கள். உங்கள் பதிவில் எந்த மதத்தை உயர்த்திப் பிடிக்கிறீர்கள். உங்கள எதுவுமே செய்யாதீங்க, ஜெபம் மட்டும் பண்ணுங்கன்னுதான் சொல்றோம்.
//செல்லமா ஒரு பெயர், அப்பாடா இன்னும் இருக்குங்க. இது பெருமையோ, // அரசாங்க பதிவேட்டில் ஒரு பெயர், செல்லமா ஒரு பெயர், அப்பாடா! இன்னும் இருக்குங்க. இது பெருமையோ, இழிவோ இல்லைங்க ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம்.//
அப்படியா? பெருமையோ இழிவோ இல்லையா? அப்புறம் எதுக்குங்க அடுத்த நாட்டு பேர வச்சுக்கணும். மதத்தைக் குறிக்காத அழகான தமிழ் பெயர்கள் எவ்வளவோ இருக்கே (சின்னக்கனி, செண்பகக்குட்டி, அரசன், அருண்மொழி, புகழேந்தி, செழியன், இளமாறன் - இவையெல்லாம் என் குடும்பத்தில் உள்ள பெயர்கள் - இது ஏதாவது மதத்தைக் குறிக்கிறதா பாருங்கள். இருப்பினும் சுத்தமானத் தமிழ்ப் பெயர்கள் (ஐயோ உடனே என் குடும்ப பெருமை பேசுறேன்னு நினைச்சு மறுமொழி எழுதீடாதீங்க))
//வைக்கப்பட்டுள்ள பெயருக்கு ஏற்றார் போல் வாழ்வதும், தங்கள் பெயரை காப்பாற்றுவதும், // ஆகவே எந்த பெயரில் அழைக்கப்படுகிறோம் என்பது இல்லங்க விஷயம், “புதிய இருதயமும்’’ புதிய ஆவியும் உடையவர்களாய், வைக்கப்பட்டுள்ள பெயருக்கு ஏற்றார் போல் வாழ்வதும், தங்கள் பெயரை காப்பாற்றுவதும், தங்களுக்கு பெயர் வைத்தவர்களின் பெயரை காப்பாற்றுவதுமே முக்கியம்..//
ஆகா! வந்துட்டீங்க பாருங்க விஷயத்துக்கு. கிரேக்க மொழி பெயருக்கு ஏற்றார்போல கிரேக்கனாக (வச்ச பேரோட மொழியே தெரியாம அந்த பெயருக்கு ஏற்றார்போல எப்படி வாழ்வது?), அதற்கேற்றார்போல் பெயரைக் காப்பாத்திக்கணும். அதுவும் அவங்களுக்கு பேர் வச்ச சர்ச் பேர ரொம்ப நல்லா காப்பாத்துணுமா?
//மேலும், நாம் இந்துவா? முஸ்லீமா? கிறிஸ்தவனா ? அல்லது மற்ற எண்ணற்ற மதங்கள் இருக்கிறதே அதில் ஒன்றோ என்பது முக்கிய மல்ல, // மேலும், நாம் இந்துவா? முஸ்லீமா? கிறிஸ்தவனா ? அல்லது மற்ற எண்ணற்ற மதங்கள் இருக்கிறதே அதில் ஒன்றோ என்பது முக்கிய மல்ல, உலகமெங்கும் ஒரே கடவுள்தான். என்பதை புரிந்து கொள்ள வேண்டும். //
முடிவா இயேசுதான் உண்மையான கடவுள் சொல்ல வர்றீங்களா? நான்தான் இயேசுவ ஏத்துக்கிறேன் எல்லா பதிவுலேயும் சொல்லியிருக்கேனே. இந்து மதத்திலேயே ஏத்துக்கிறேன்னுதானே சொல்றேன். அதுக்கு நான் கிறிஸ்தவனாக வேண்டிய அவசியமே இல்லையே. சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதும் "பிதாவே! இவர்களை மன்னியும். தான் என்ன செய்கிறோம் என்றறியாதிருக்கிறார்கள்" என்று மன்றாடும் ஒரு நல்லவரை கடவுளாக ஏற்றுக் கொள்வதில் இந்து மதத்திற்கு எந்த இடர்பாடும் இருக்காது. நீங்கள் ஒவ்வொரு இந்து வீடாகச் சென்று பாருங்கள். எத்தனை வீடுகளில் இயேசு படம் இருக்கிறதென்று. இயேசு எங்களை மதம் மாறச் சொல்லவில்லை. அவர் அப்படி நினைத்திருந்தால் எப்போதோ எங்களை மாற்றியிருப்பார். "நீ நன்றாயிருக்கிறாய் மகனே! உலகத்திற்கு வழிகாட்டு" என்றுதான் ஒரு இந்துவிடம் இயேசு சொல்வார் என்று நான் நினைக்கிறேன்.
அதற்காக நான் என் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. எங்கள் நாகரிகத்திற்குச் சமமான சுமேரிய நாகரிகமென்ன ஆயிற்று, மெசபொடேமியா என்ன ஆயிற்று, பாரசீகம் என்ன ஆயிற்று, எகிப்திய நாகரிகமென்ன ஆயிற்று, அவர்கள் அடையாளத்தை இழந்துவிட்டார்கள். தங்கள் நாகரிக்கத்தை நினைத்து ஒவ்வொரு எகிப்தியனும், ஒவ்வொரு இராக்கியனும் வெட்கப்பட்டு நிற்கும் அளவுக்கு அவர்களை முட்டாளாக்கிவிட்டீர்களே, இங்கிலாந்துக்கு என்ன நாகரிகம் என்று உலகத்திற்குத் தெரியுமா? அமெரிக்காவிற்கு என்ன நாகரிகம் இருந்தது என்றுதான் தெரியுமா? அவர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டனர். எங்களையும் இழக்கச் சொல்கிறீர்களே!
ஜெயமோகன் கட்டுரையைப் படித்தீர்களா? என் குல தெய்வத்தையும் கும்பிட்டுக் கொண்டு நான் சமணனாக (Jain) முடியும், பௌத்தனாக (Buddhist) முடியும் என்று கூறுகிறார். நான் கிறிஸ்தவனாக மாறிவிட்ட பிறகு என் குல தெய்வத்தை நான் வணங்க முடியுமா? என் குலதெய்வம் வேறு யாருமல்ல என்ன தாய், என் பாட்டன், என் முப்பாட்டன்தான். பொறாமை கொண்ட, எரிச்சலுடைய தெய்வத்தால் இதையெல்லாம் சகிக்க முடியுமா?
மற்றபடி ஒரே கடவுள்தான் என்று இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?
// கிளை கடவுள், சிறு கடவுள், பெருங்கடவுள் என்று, நாமாக தேர்ந்தெடுப்பதும், அல்லது நமக்கு பிடித்ததும், பிடித்த தெய்வத்தை வழிபடுவது எல்லாம் உண்மை ஆகி விடுமா ? இல்லங்க, அந்த மெய் பரம்பொருளை சரியாக அறிந்து வழிபட வேண்டும். இதைத்தான் கிறிஸ்தவம் வலியுறுத்தி கூறுகிறது //
நாங்களாங்க தேர்ந்தெடுத்தோம். கடவுளே எங்களைத் தேர்ந்தெடுத்து, இந்து இல்லங்களில் பிறக்க வைத்தார் என்றே நினைக்கிறோம். மெய்ப்பொருள் ஒன்றுதான், அதற்குப் பெயர்கள்தான் வேறு வேறு.
அப்படியானால் நீங்கள் உங்களுக்கு பிடிக்காத கடவுளை, அவர் தேர்ந்தெடுத்த ஒரே காரணத்தால் வணங்குகிறீர்களா என்ன?
//கிறிஸ்தவர்களில் சிலர் செய்யும் தவறை குறித்து, ஒரு கிறிஸ்தவ தலைவர் இப்படியாக சொல்லுகிறார் “இந்திய கிறிஸ்தவர்களின் சிலருடைய எண்ணங்கள், இந்திய பெயர்களெல்லாம், வேறுமதத்தின் பெயர் என்றும், மேலே நாட்டு பெயர்கள் எல்லாம் கிறிஸ்தவ பெயர்கள் என்றும், மேலை நாட்டுப் பெயர்கள் இந்திய நாட்டு பெயர்களை விட மேலானவை என்று நினைத்து கொள்கின்றனர். இது தவறு’’//
பாஸ்டர், உங்க பேரு என்ன? உங்கள் பிள்ளைகளின் பெயர் என்ன? என்ன மொழி? எந்தக் கோத்திரத்தில் வந்த பெயர்?
//இப்படி சிலர் செய்வதால்தான் மாற்று மதத்தில் இருக்கும் சிலருக்கு கிறிஸ்தவம் இந்தியாவில் அந்நியமாக தெரிகிறது.//
இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்ரேல் தவிர்த்து மற்ற எல்லா நாடுகளுக்குமே அந்நிய மதம் தான் கிறிஸ்தவம்.
//அது மட்டுமல்ல தாங்கள்தான் மேலானவர்கள், மண்ணின் மைந்தர்கள் என்பது போல காண்பிக்கவும், மனம் மாறின கிறிஸ்தவர்களை வெறுக்கவும் வைக்கிறது''.என்று குறிப்பிடுகிறார்.//
சேச்சே எப்பவும் ஒரு உண்மையான மண்ணின் மைந்தன் அப்படி நினைக்க மாட்டான். கிறிஸ்தவர்கள் மனம் மாற வேண்டும் (உண்மையான மனமாற்றம், மதமாற்றமல்ல) என்றுதான் நினைக்கிறோமே தவிர, ஒருநாளும் வெறுக்க மாட்டோம். எங்கள் உடன்பிறந்தவர்களை நாங்கள் எப்படி வெறுப்போம்.
// மாட சாமியாகவோ, குப்புசாமியாகவோ, கந்தசாமியாகவோ, எந்த சாமியாக வேண்டுமானாலும் இருக்கலாம் தப்பில்லை, ஆனால் நல்ல சாமியா இருக்க வேண்டும், அது மட்டுமல்ல நல்ல சாமியா, நம்மை படைச்ச சாமியா, என்று பார்த்து வழிபட வேண்டும். நம்மை படைக்காததும், நாம் உருவாக்கியதும், சிறு தெய்வமும் இல்ல, பெரும் தெய்வமும் இல்ல புரிந்து கொள்ளுங்கள்.//
நீங்கள சொல்றது நல்லா புரியுது, சும்மா புரிந்தமாதிரி தலையாட்ட நான் அறிவுஜீவியா என்ன? பாமரன்தானே. அதுசரி. அந்த நல்ல சாமி, நம்மைப் படைச்ச சாமி, பிதாவா? சுதனா? பரிசுத்த ஆவியா? ஆமென்.











0 மறுமொழிகள்:
Post a Comment
நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.
கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.
சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.